கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2019ஆம் ஆண்டுக்கான இயல் விருது சு.வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சு. வெங்கடேசன் மதுரை மாவட்டம், ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர்.பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்தவர். இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற இளம் எழுத்தாளர் சு. வெங்கடேசனே ஆவார். அதே போல் முதல் நாவலுக்கே இவ்விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றார்.