ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலில் நேற்று ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தேர்தல் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.